Education
பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது - மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை!
SimpliCity News Team · 11 Sept 2023
கோவை: பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைகழகத்தின், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களை வரவேற்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், பொறியியல் படிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது,
பொறியியல் படிப்புகளில் நிறைய வாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்தியாவை நோக்கி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை மாணவர்களிடம் கொண்டு செல்ல முயன்று வருகிறேன்.
குறிப்பாக ஜப்பானில் நிறைய வேலை வாய்ப்பு உருவாக இருக்கின்றது, அங்கு இளைஞர்கள் குறைவு என்பதால் அந்த வேலைவாய்ப்புகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கணிணி கோடிங் 5 ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என்று தெரியாது.
ஆனால் பொறியியல் படித்துக் கொண்டால் வாழ்நாள் சிறப்பாக இருக்கும். அடுத்து விண்வெளி புரட்சி வருகின்றது. செல்போன் டவர் இல்லாத வகையில், செயற்கை கோள்களால் இயக்கும் அடுத்த தலைமுறை கைபேசி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
குலசேகர பட்டணத்தில் அமையும் ஏவுத்தளம் உலகின் மிகச்சிறந்த மையமாக அமையும். வர்த்தக ரீதியில் தினம் தினம் ஏவுகணைகள் அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். நிலவை நோக்கிய பயணங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்த போகின்றது வெப்பமயமாக்கலைதடுக்க முடியும்.
அடுத்தக்கட்ட ஆராய்ச்சி நிலவை மையமாக வைத்து இருக்க வேண்டும். நிலவில் இருப்பதை எடுத்து வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். நிலவில் இருந்துதனிமங்களை சில டன்கள் எடுத்து வந்தாலே அதை வைத்து பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
விண்வெளி படிப்புகள் நிறைய வரவேண்டும் என்பதற்காக முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது, மாவட்டத்திற்கு ஒரு ஸ்டெம் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது,கிணத்துக்கடவு பள்ளியில் ஸ்டெம் மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சந்திராயன் வெற்றியை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக பார்க்கின்றன.
நம்முடைய முயற்சிகள் சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றது. நிலவில் நீர் இருப்பதையும், துருவப் பகுதியில் சந்திராயன் இறக்கி இருப்பதும் உன்னிப்பாக கவனிக்கபடுகின்றது. விண்வெளியின் பருவ நிலையை புரிந்து கொள்வதும் முக்கியமாக இருக்கிறது, விண்வெளி துறையை போல விவசாயத்துறையை கொண்டு வர வேண்டும். அதை நோக்கிய பயணங்களும் சிறப்பாக இருக்கிறது.
விண்வெளிக்குபோய்வரும் தொழில்நுட்பத்தை வைத்து விமான பயணத்தையும் மாற்ற முடியும், ராக்கெட் தொழில் நுட்பத்தில்சீக்கிரமாக, பத்திரமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வரவும் வாய்ப்புகள் இருக்கிறது.
நிலவுக்கு செல்ல பிற நாடுகளுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பத்துடன் செல்ல வேண்டும், ஒவ்வொரு நாடும் தனித்தனியாக செல்லாமல் அனைத்து நாடுகளும் ஒன்றாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நிலவிலேயே விண்வெளி மையம் அமைக்க வேண்டும்,
சந்திராயன் 3 இறங்கிய இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இருக்கின்றோம். இதை நோக்கி விவாதங்கள் போய் கொண்டு இருக்கின்றது.
இவ்வாறுவிஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.